14 Dec 2016

மீலாது கொண்டாடுவதற்க்கு தக்க மறுப்பு.

மீலாதை ஆதரிக்கும் பரலேவியர்களின் வாதமும்  நமது மறுப்பும்:

(முதல் வாதம்)

(قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَٰلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِمَّا يَجْمَعُونَ)

அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான் நபியே நீர் கூறும்: அல்லாஹ்வுடைய கருணையினாலும்
அவனுடைய அருளினாலும் கிடைத்துள்ளதாகும்; எனவே இதனைக் கொண்டே அவர்கள்
மகிழ்ச்சியடையட்டும் அது அவர்கள் சேகரிக்கிற செல்வத்தை விட மிக்க நலமுடையதாக
இருக்கும்."(சூரா யூனுஸ் 58)

இந்த வசனத்திற்க்கு போலி சுன்னத் ஜமாத் எனும் பரேலவிகள் கூறும் வாதத்திற்க்கு தக்க பதிலை இங்கு காண்க.

👇 👇

(ஃபள்ல்) மற்றும் அருள் (ரஹ்மத்)

அல்லாஹுதஆலா தனது ரஹ்மத்தின் மீது மகிழும்படி கட்டளையிடுகிறான்.நபி (ஸல்)
அவர்கள் ரஹ்மத்துல் ஆலமீனாக திகழ்கிறார்கள் எனவே அன்னாரின் வருகையின் பேரில்
நாம் அனைவரும் மீலாத் கொண்டாடவேண்டும்.  நமது மறுப்பு:

(1) இந்த வசனத்தில் நபி (ஸல்) அவர்களின் பரக்கத் நிறைந்த பிறப்பை பற்றி
கூறப்படவில்லை.இதற்கு முந்திய வசனத்தில் குர்ஆன் மற்றும் ஹிதாயத்தைப்
பற்றிதான் கூறப்படுகிறது.

(2)அந்த வசனத்தில் உள்ள கருணை (ஃபள்ல்) மற்றும் அருள் (ரஹ்மத்) இரண்டை
குறித்து உமர் (ரளி) அவர்கள் குர்ஆன்,சுன்னா என்பதாக விளக்கம் கூறியுள்ளார்கள்.
ஹள்ரத் அய்ஃபஃ இப்னு அப்த் அவர்களிடமிருந்து அறிவிக்கப்படுகிறது
ஈராகின் ஜகாத் பொருளானது
உமர் (ரளி) அவர்களிடம் வந்த பொழுது அன்னார் தனது அடிமையுடன்
புறப்பட்டார்கள்.

(ஜகாதின்) ஒட்டகத்தை எண்ணிப்பார்த்த பொழுது மிக அதிகமாக
இருந்தது.உமர் (ரளி) அவர்கள் அல்லாஹ்விற்கு எல்லாப் புகழும் என்றார்கள்
அன்னாரின் அடிமை கூறினார் அமீருல் முஃமினீன் அல்லாஹ்வின் மீது ஆணையாக! 'இது
அல்லாஹ்வின் அருளும் கருணையுமாகும்' அதற்கு உமர் ரளி அவர்கள் கூறினார்கள் :

'நீர் தவறாக சொல்கிறாய்!
அவ்வாறு இல்லை அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான் (நபியே)
நீர் கூறும்: அல்லாஹ்வுடைய கருணையினாலும் அவனுடைய அருளினாலும்
கிடைத்துள்ளதாகும்; எனவே இதனைக் கொண்டே அவர்கள் மகிழ்ச்சியடையட்டும்
அல்லாஹ்வின் அருள் மற்றும் கருணையானது நேர்வழியாகும் நேர்வழியானது குர்ஆனும்
சுன்னாவாகும் என்றார்கள்.

(3) அரபி மொழியிலே ஃFபர்ஹத் என்பதற்கு  மகிழ்ச்சியடைதல் ,மகிழ்ச்சியை உணர்தல்
என்பதாகும்.மகிழ்ச்சியாக இருப்பது என்பது வேறு கொண்டாடுவது என்பது வேறு
இரண்டிற்கும் மத்தியில் வானம் பூமிக்கு மத்தியில் வித்தியாசத்தைப் போன்று
உள்ளது.உதாரணமாக சூரா தவ்பாவில் தபூக் போரை விட்டு பின்தங்கிய நயவஞ்சகர்கள்
குறித்து அல்லாஹ் கூறுகிறான்:

(فَرِحَ الْمُخَلَّفُونَ بِمَقْعَدِهِمْ خِلَافَ رَسُولِ اللَّهِ وَكَرِهُوا أَنْ يُجَاهِدُوا بِأَمْوَالِهِمْ وَأَنْفُسِهِمْ فِي سَبِيلِ اللَّهِ وَقَالُوا لَا تَنْفِرُوا فِي الْحَرِّ ۗ قُلْ نَارُ جَهَنَّمَ أَشَدُّ حَرًّا ۚ لَوْ كَانُوا يَفْقَهُونَ)

 அல்லாஹ்வின் தூதர் (தபூக் போருக்குச்) சென்ற
பிறகு போருக்குச்  செல்லாது தம் இருப்பிடத்தில் தங்கி விட்டோர்
மகிழ்ச்சியடைந்துள்ளனர்.(சூரா தவ்பா 81)

முனாஃபிகீன்கள் மகிழ்ச்சியடைந்தார்கள்
என அல்லாஹ் கூறுகிறான் இதற்கு விழா எடுப்பது கொண்டாடுவது கருத்தா? அல்லது
உள்ளத்தில் மகிழ்ச்சியை உணர்ந்தார்கள் என்பதா?

(4)ஒரு வாதத்திற்கு இந்த ஆயத்தின் கருத்தானது மீலாத் கொண்டாடுவதாக இருந்தால்
நபி ஸல் அவர்கள் ஸஹாபாக்கள் தாபியீன்கள் இமாம்கள் அதன் பேரில் ஏன்
அமல்செய்யவில்லை?

இரண்டாவது வாதம்:

சூரா மாயிதாவில் அல்லாஹ்வே! எங்கள் இறைவா!   வானிலிருந்து எங்களுக்கு உணவு
தட்டை இறக்குவாயாக! அது எங்களில் முதலாமவருக்கும், எங்களில் கடைசியானவருக்கும்
திருநாளாகவும் உன்னிடமிருந்து பெற்ற சான்றாகவும் இருக்கும்.எங்களுக்கு
உணவளிப்பாயாக! உணவளிப்போரில் நீயே சிறந்தவன்" என்று மர்யமின் மகன் ஈஸா (அலை)
கூறினார்.

  இந்த ஆயத்திலே ஈஸா (அலை) அவர்கள் மாயிதா இறங்கிய நாளை பெருநாளாக   இருப்பதை
விரும்பினார்கள் எனும் போது நாம் நபி (ஸல்) அவர்களின் பிறப்பு நாளை ஏன் மீலாத்
பெருநாளாக கொண்டாடக்கூடாது?

நமது மறுப்பு:

(1)ஈஸா அலை அவர்கள் மாயிதாவை  பெருநாளாக விரும்பினார்கள். மாறாக மாயிதா
இறங்கிய நாளல்ல. இதற்கு ஆதாரம் அந்த வசனத்தில் வருகிற வார்த்தை تكون لنا عيدا
அது எங்களுக்கு திருநாளாக அமைய வேண்டும் இதில் உள்ள வார்த்தை تكون என்பதானது
ஒருமையாகவும் பெண்பாலை குறிக்கிறது.இது மாயிதாவைதான் சுட்டிகாட்டுகிறது.

( 2) ஒரு வாதத்திற்கு மாயிதா இறங்கிய நாள் பெருநாள் என வைத்துக்கொண்டாலும்
இந்த வசனம் நமக்கு எதிரான ஆதாரமல்ல. பரலேவிகள் இதனை வைத்து மீலாத் விழாவை
கொண்டாட முடியாது.
அதிர்ச்சியளிக்கிறது மாறாக கைசேதப்படவேண்டிய விஷயம் பரலேவிகளுக்கு இஸ்லாத்தின்
அடிப்படையை பற்றிய அறிவு கூட இல்லை ஏனெனில் நமது ஷரீஅத்தின் எந்த
சட்டத்திட்டங்களும் முன்னுள்ள சமுதாயத்தினரின் அமலை வைத்து
நடைமுறைப்படுத்தக்கூடாது அதே சமுயத்தில் முன்னுள்ள சமுதாயத்தின் சட்டங்களில்
ஏதேனும் ஒன்றை அல்லாஹ்வோ ரஸுலோ அனுமதி கொடுத்திருந்தால் நாம் அதன் பேரில் அமல்
செய்ய முடியும்.
அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத் என்பது நபி (ஸல்) அவர்களின் சுன்னத் மற்றும்
ஸஹாபாக்களின் வழிமுறைகள், இமாம்களின் வழிகாட்டுதலுக்கு பெயராகும் என்று
போலியாக நடிக்கும் பரலேவிகள் முந்தைய சமுதாயத்தின் ஷரீஅத்தின் சட்டத்தை
எடுத்து ஆதாரம் பிடிப்பது உச்சகட்ட மடமைத்தனமாகும். பிக்ஹில் வருகிற
பிரபல்யமான சட்டம் :

باب العبادة و الديانات و التقربات متلقاة عن الله و رسوله
صلى الله عليه و سلم فليس لاحد ان يجعل شيئا عبادة او قربة الا بدليل شرعي

கருத்து: 

வணக்க வழிபாடுகள், கொள்கைகள் அல்லாஹ்விடம் நெருங்கத்தை பெறுவதற்காக
அவனிடமிருந்தும்
அவனின் தூதர் நபி (ஸல்) அவர்களிடமிருந்து கிடைக்கப்பெறுகிறது.
இதனால்  ஷரீஅத்தின் ஆதாரமின்றி எந்த ஒரு காரியத்தையும் வணக்கமாக அல்லது
நன்மையாக ஆக்குவதற்கு அனுமதியில்லை.

(3)அந்த வசனம் பெருநாள் கொண்டாடுவதை ஆமோதிக்கிறது எனில்
நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்கள்,இமாம்கள் அந்த வசனத்தின் பேரில் ஏன் அமல்
செய்யவில்லை?

மூன்றாவது வாதம்:

   அறிவிப்பாளர் உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

ஸுவைபா, அபூலஹபின்
அடிமைப் பெண்ணாவார். அபூலஹப் அவரை விடுதலை செய்திருந்தார். அவர் நபி (ஸல்)
அவர்களுக்குப் பாலூட்டினார். அபூலஹப் இறந்த போது அவருடைய குடும்பத்தாரில்
ஒருவர் அவரைக் (கனவில்) கண்டார்.   அபூலஹப் மோசமான நிலையில் அவருக்குக்
காட்டப்பட்டார். அபூலஹபிடம், "(மரணத்திற்குப் பிறகு) நீ எதிர் கொண்டது என்ன?
என்று அவர் கேட்டார். உங்களை விட்டுப் பிரிந்த பின் ஒரு சுகத்தையும் நான்
சந்திக்கவில்லை. ஆயினும், நான் ஸுவைபாவை விடுதலை செய்ததற்குப் பிரதியாக இந்த
விரல்கனூடே எனக்கு நீர் புகட்டப்படுகிறது" என்று கூறினார்.
(புகாரி 5101 வது
ஹதீஸின் கீழ் உள்ள குறிப்பு)

  ஆக இதன் மூலம் நபி (ஸல்) அவர்களின் பிறப்பு
செய்தியை கேள்விப்பட்டு அடிமையை உரிமையை விட்ட அபூலஹபிற்கே இந்த
பாக்கியமெனில்  நாம் நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளில் மீலாத் கொண்டாடுவதன்
மூலமும் மெளலித் ஓதுவதன் மூலம் நமக்கு பாக்கியங்கள் கிடைக்காதா? நிச்சயமாக
நமக்கும் ஏராளமான நன்மைகள் உண்டு.

நமது மறுப்பு: 

இந்த சம்பவமானது
ஆதாரப்பூர்வமானது இல்லை
இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

(1)இந்த அறிவிப்பை உர்வா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.ஆனால் இதனை
எவரிடமிருந்து அறிவித்தார் என்பதை கூறவில்லை.எவரிடமிருந்து கேட்டார் என்பதை
கூறவில்லை.இதனால் இந்த ரிவாயத்தானது தொடர்பு அறுந்தது.
பலகீனமானது.

(2)இந்த ரிவாயத்தானது குர்ஆனின் விளக்கத்திற்கு எதிரானது.ஏனெனில் இந்த
அறிவிப்பில் அபூஜஹ்லின் கை மற்றும் விரல் சரியாக இருந்ததாக உள்ளது. ஆனால்
குர்ஆனில் அவனின் கை நாசமடையட்டும் என்று அல்லாஹ் கூறுகிறான்   இந்த
வசனத்திற்கு பரலேவியின் தலைவர் அஹ்மத் ரிளாகானின் மொழிபெயர்ப்பு:

அழிந்து போகட்டும்! அபூலஹபின் இருகைகளும் அழிந்து விட்டது.
(கன்ஜுல் ஈமான்)

பீர் முஹம்மது கரம் ஷாஹ் அந்த வசனத்திற்கு செய்த மொழிபெயர்ப்பு:

 உடைந்து
போகட்டும்! அபூஹலபின் இருகைகளும் அழிந்து விட்டது.
 (தஃப்ஸீர் ளியாஉல் குர்ஆன்)

சிந்தித்துப் பாருங்கள்!
குர்ஆனின் கருத்திற்கு ஏற்ப அபூலஹபின் இருகைகளும் அழிந்து விட்ட பிறகு அவனின்
இருகைகளிலிருந்து எவ்வாறு நீர் புகட்டப்படும்?

(3) இந்த ரிவாயத்தானது ஷரீஅத்தின் சட்டத்திட்டங்களுக்கு எதிரானது. ஏனெனில்
ஷரீஅத்திலே சில குற்றங்களின் காரணமாக மனிதனின் அமல்கள் அழிந்துவிடும்.அவனின்
எந்த அமல்களும் அவனுக்கு பயனளிக்காது.
உதாரணமாக இணைவைப்பு அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

 இதுவே அல்லாஹ்வின்
நேர்வழியாகும்;தன் அடியார்களில் அவன் நாடியவரை அதைக் கொண்டு
வழிநடத்துகிறான்;அவர்கள் இணைவைத்தால்,அவர்கள் செய்து கொண்டிருந்த (நல்ல)வை
அவர்களை விட்டும் அழிந்துவிடும்.
(அன்ஆம் 89)

நபியே நீர் இணைவைத்தால் திண்ணமாக உம்முடைய நற்செயல் அனைத்தும்
அழிந்துவிடும்;இன்னும் திண்ணமாக நீர் நஷ்டவாளர்களில் உள்ளவராக ஆகிவிடுவீர்
என்றுதான் உமக்கு முன்னால் உள்ள ரஸூலான வர்களுக்கும் திட்டமாக வஹீ
அறிவிக்கப்பட்டது. (ஸுமர் 65) 

அபூலஹப் பெரும்பாவமான இணைவைப்பில் இருந்தான்
என்பதில் எவருக்கும் இருவேறு கருத்து இருக்க முடியாது.எனவே அபூலஹப் நல்ல அமல்
செய்திருந்தாலும் அவனின் இணைவைப்பின் காரணமாக அதற்கு அல்லாஹ்விடத்தில் எந்த
மதிப்பும் இருக்காது.

(4)இந்த ரிவாயத்தானது வரலாற்றிற்கு எதிரானது.இந்த அறிவிப்பில் நபியின் பிறப்பு
செய்தியை கேள்விப்பட்டு அபூஜஹ்ல் தனது அடிமைப்பெண்ணை உரிமைவிட்டான் என
வந்துள்ளது.ஆனால் வரலாற்று ரீதியாக ஆராயும்போது அபூலஹப் அடிமைப்பெண் ஸுவைபா
நபி (ஸல்) அவர்கள் பிறந்து இருபத்தைந்து வருடங்கள் கழித்து உரிமைவிட்டான் என
வந்துள்ளது.

ஹாபிள் இப்னு அப்துல் பர் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்:

அபூலஹப் அடிமைப்பெண்ணை
நபி (ஸல்) அவர்கள் மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்த பிறகு உரிமைவிட்டான்
(அல்இஸ்தீஆப்)

அல்லாமா அபுல் ஃபரஜ் அப்துர் ரஹ்மான் இப்னுல் ஜவ்ஜி கூறுகிறார்கள்:

நபி (ஸல்)
அவர்கள் கதீஜா (ரளி) அவர்களை திருமணம் செய்த பிறகும் ஸுவைபா அடிமையாகதான்
இருந்தார்கள்.ஸுவைபா  அவர்கள் அன்னாரிடத்தில் வருவார்கள்.நபி (ஸல்) அவர்களும்
கதீஜா (ரளி) அவர்களும் அடிமைப்பெண்ணிடம் நல்ல முறையில் நடப்பார்கள்.
(அல்வஃபா
பிஅஹ்வாலில் முஸ்தஃபா)

  நபி (ஸல்) அவர்கள் அபூலஹபின் அடிமைப்பெண்ணான ஸுவைபா அவர்களுடன் நல்ல
முறையில் நடப்பதை பார்த்த கதீஜா (ரளி) அவர்கள் அபூலஹபிடமிருந்து அவர்களை
விலைக்கு வாங்கி உரிமை விட எண்ணினார்கள்.
இதன்மூலம் அண்ணலாரின் மனம் மகிழ்வுறும்.எனினும் சபிக்கப்பட்ட அபூலஹப், அவர்களை
விற்பதற்கு மறுத்துவிட்டான்.நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு
ஹிஜ்ரத் செய்த பிறகுதான் அபூலஹப் ஸுவைபாவை உரிமைவிட்டான். (தபகாத்)

(5) இந்த அறிவிப்பில் உள்ள நிகழ்வானது இஸ்லாமிய ஷரீஅத் அருளப்படுவதற்கு
முன்னால் நடந்ததாகும்.இஸ்லாமிய ஷரீஅத் வந்த பிறகு தவ்ராத்,ஜபூர்,இன்ஜில் போன்ற
வான்வேதங்கள் நமக்கு ஆதாரம் இல்லையெனும் போது அபூலஹப் போன்ற
காபிர்,சபிக்கப்பட்டவனின் செயலானது நமக்கு எவ்வாறு ஆதாரமாக அமையும்?

(6)இந்த அறிவிப்பானது ஆதாரப்பூர்வமானது என வைத்துக்கொண்டாலும்
நபி (ஸல்) அவர்கள் நபித்தோழர்கள், நல்லோர்களான இமாம்கள் அதன்பேரில் அமல்
செய்திருப்பார்கள் ஆனால் அதன் பேரில் அவர்கள் அமல் செய்யவில்லை எனும் போதே
அந்த அறிவிப்பிலே மீலாதிற்கு அறவே ஆதாரமில்லை என்பதை புரியமுடிகிறது.

நான்காவது வாதம்:

நபி (ஸல்) அவர்கள் திங்கள் கிழமை நோன்பு நோற்றார்.இது குறித்து கேட்கப்பட்டது
அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
இந்த நாளிலே நான் பிறந்தேன்.இந்நாளிலே எனக்கு நுபுவ்வத் கிடைத்தது என்றார்கள்.
இதனை வைத்து நபி (ஸல்) அவர்கள் பிறந்த நாளிற்கு தனிச்சிறப்பு உள்ளதை
புரியமுடிகிறது.அதனால் அன்று நாம்  மீலாத் விழா கொண்டாடலாம் என்று பரலேவிகள்
வாதிடுகிறார்கள்.

நமது பதில்:

(1) இந்த ஹதீஸும் மீலாதிற்கு எதிரான ஆதாரமாக அமைந்துள்ளது.ஏனெனில்
நபி (ஸல்) அவர்கள் அந்த நாளில் நோன்பு நோற்றுள்ளார்கள்.இது பெருநாளாக
இருந்திருந்தால் நபி ஸல் அவர்கள் ஒரு போதும் நோன்பு
வைத்திருக்கமாட்டார்கள்.ஏனெனில் பெருநாள் அன்று நோன்பு வைப்பது
தடுக்கப்பட்டுள்ளது.ஆக நபி (ஸல்) அவர்கள் பிறந்த நாளன்று நோன்பு நோற்றதினால்
அன்றைய தினம் மீலாத் பெருநாளாக ஒரு போதும் இருக்கமுடியாது.

(2)நபி (ஸல்) அவர்கள் தனது பிறந்த நாள் ரபியுவ்வல் எட்டா? அல்லது ஒன்பதா?
அல்லது பன்னிரெண்டா? என்று குறிப்பிட்டு சொல்லவில்லை.மாறாக நபியவர்கள் தனது
பிறந்தநாளான திங்கள் கிழமை அன்று நோன்பு வைத்துள்ளார்கள்.ஆனால் திங்கள்கிழமை
வருடத்தில் எந்த தேதியாக வேண்டுமானாலும் இருக்கலாம்.இதன் படி ஒருவர் வருடம்
முழுவதும் விட்டு விட்டு ஒரு மாதத்தில் குறிப்பாக ஒரு நாளிற்கு
தனிமுக்கியத்துவம் அளிப்பதானது நபி ஸல் அவர்களுக்கே மார்க்கத்தை
கற்றுக்கொடுப்பதை போன்று அமைந்துள்ளது (அல்லாஹ் பாதுகாப்பானாக)

(3)நபி (ஸல்) அவர்கள் திங்கள்கிழமை நோன்பு வைத்ததற்கு இரண்டு காரணங்கள் உள்ளது.
ஒன்று நபி (ஸல்) அவர்கள் அந்த நாளில்தான் பிறந்தார்கள்.இரண்டாவது அந்த நாளில்
தான் நுபுவ்வத் கிடைத்தது.இரண்டும் ஒரே கிழமையில் நடந்துள்ளது.எனினும்
இரண்டின் தேதியும் மாறுபட்டது.அதாவது அன்னாரின் பிறப்பானது ரபியுல் அவ்வல்
ஒன்பது அல்லது பன்னிண்டு நிகழ்ந்துள்ளது.நபிக்கு தூதுத்துவமானது ரமளான்
இருபத்தொன்றில் கிடைத்தது.இதனால் நாம் கூறுகிறோம் நபி (ஸல்) அவர்களின் பிறந்த
தினத்தை பெருநாளாக கொண்டாடுவதாக இருந்தால் நபிக்கு நபித்துவம் கிடைத்த
நாளையும் பெருநாளாக கொண்டாடதயாரா? தூதுத்துவம் கிடைத்த நாளை நபி (ஸல்) அவர்கள்
பிறந்த நாளை விட வலியுறுத்த வேண்டும்.ஏனெனில் தூதுத்துவம்தான் நபி (ஸல்)
அவர்களின் சிறப்பிற்கும்,மேன்மைக்கும்,
தனித்தன்மைக்கும் காரணமாக உள்ளது.அதனை ஏற்பதுதான் கலிமாவின் ஒரு பகுதியாக
உள்ளது.நபித்துவ விழா கொண்டாடக்கூடாது எனில் மீலாத் விழாவும் கொண்டாடக்கூடாது.

(4)நபி (ஸல்) அவர்கள் திங்கள் கிழமை நோன்பு வைத்ததன் காரணம் அன்றையதினத்தில்
தான் அடியார்களின் அமல்கள் அல்லாஹ்விடம்
சமர்ப்பிக்கப்படுகிறது.
(ஆதாரம்:திர்மிதி)

 இந்த சிறப்பானது திங்கள்கிழமைக்கு
உரித்தானது.மாறாக ரபியுல் அவ்வல் பன்னிரெண்டுக்கு உரித்தானதல்ல.ஏனெனில் இந்த
தேதியானது ஒவ்வொரு வருடமும் திங்கள்கிழமை அல்லாமல் வேறு கிழமையிலும்
வருகிறது.சில சமயங்களில் இந்த தேதியானது ஜும்ஆ அன்றும் வருகிறது.நபி (ஸல்)
அவர்கள் அடியார்களின் அமல்கள் அல்லாஹ்வின் சமூகத்தில் சமர்ப்பிக்கப்படுவதன்
காரணத்தால் திங்கள் கிழமை நோன்பு நோற்றார்கள் இந்த காரணமானது ஜும்ஆ நாளில் ஒரு
போதும் பெறப்படாது.அதிலும் குறிப்பாக ஜும்ஆ நாளன்று தனித்து நோன்பு வைப்பதற்கு
தடையும் உள்ளது.ஆக நபி (ஸல்) அவர்கள் திங்கள் கிழமை நோன்பு நோற்பதை
முக்கியத்துவமாக கருதினார்களே தவிர தேதியானது நோக்கமல்ல என்பதை இதன் மூலம்
தெளிவாக அறியமுடிகிறது.கிழமைக்கு உள்ள சிறப்பை கண்டுகொள்ளாமல் தேதிக்கு
முக்கியத்துவம் அளிப்பதானது ஹதீஸிற்கு எதிரானதாகும்.

(5)நபி (ஸல்) அவர்கள் தங்கள் பிறந்த நாளில் நோன்பு என்ற அமலை
கடைப்பிடித்தார்கள்.ஆனால் இதற்கு எதிராக மீலாத் கொண்டாடுகிறார்கள்.நோன்பு
நோற்பதில்லை.மாறாக அன்றைய நாளில் வகை வகையான உணவுகளை வயிறு புடைக்க உண்டு
மகிழ்கின்றனர். நடுநிலையோடு யோசித்து பார்ப்போம்!
இதற்கு பெயர் நபி (ஸல்)
அவர்களின் நேசமா?
அல்லது விரோதமா?

(6)இந்த அறிவிப்பானது மீலாதை கொண்டாட என அனுமதி என்பதாக ஒரு வாதத்திற்கு
ஏற்றுக்கொண்டாலும்
நபி (ஸல்) அவர்கள், நபித்தோழர்கள், நல்லோர்களான இமாம்கள் அதன்பேரில் அமல்
செய்திருப்பார்கள் .ஆனால் அதன் பேரில் அவர்கள் அமல் செய்யவில்லை எனும் போதே
அந்த அறிவிப்பிலே மீலாதிற்கு அறவே ஆதாரமில்லை என்பதை புரியமுடிகிறது.

ஐந்தாவது வாதம்:

நபி (ஸல்) அவர்கள் ஆஷுரா நாளன்று நோன்பு வைத்தார்கள்.அதனை கடைப்பிடிக்கும்படி
கூறியுள்ளார்கள்.ஏனெனில் அன்றைய தினம் அல்லாஹ், மூஸா (அலை) அவர்களையும்
அவர்களின் சமுதாயத்தினரையும் பிர்அவ்ன் மற்றும் அவனின் படையினரிடமிருந்து
காப்பாற்றினான்.அதைப்போல முழு மனித குலத்திற்கும்  நபி (ஸல்) அவர்களின்
பிறப்பானது பெரும் ஈடேற்றமாகும்.எனவே நாம் நபியின் பிறந்த நாளை
புனிதப்படுத்தலாம்.

நமது மறுப்பு:

(1)இந்த ஹதீஸும் பரலேவிகளுக்கு எதிரான ஆதாரமாக அமைந்துள்ளது.மீலாத் விழா
குறித்து எந்த ஒரு ஹதீஸும் இல்லாததால் தங்களது கொள்கைக்கு ஏற்ப ஹதீஸை
புரட்டுவதை புரியமுடிகிறது.நபி (ஸல்) அவர்கள் மூஸா (அலை) அவர்கள் ஈடேற்றம்
பெற்ற நாளில் நோன்புதான் வைத்தார்களே தவிர விழா எடுத்து
கொண்டாடவில்லை.பெருநாளாக இருந்திருந்தால் நோன்பு
வைத்திருக்கமாட்டார்கள்.ஏனெனில் பெருநாள் அன்று நோன்பு வைக்க தடையுள்ளது.நபி
(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றார்கள்.ஆனால் பரலேவிகள் மீலாத் அன்று
கொண்டாடுகிறார்கள் எனில் இது நபியின் செயலுக்கு மாற்றமில்லாமல் வேறு எதுவாக
இருக்கமுடியும்?

(2)நபி (ஸல்) அவர்கள் ஆஷுரா நாளில் நோன்பு நோற்றது மூஸா (அலை) அவர்களின்
ஈடேற்றம் காரணம் எனில் இதற்கும்  நபியின் பிறந்த நாளிற்கும் என்ன சம்பந்தம்
உள்ளது?

ஏனெனில் நபி (ஸல்) அவர்கள், மூஸா (அலை) பிறந்த நாளில் நோன்பு
நோற்கவில்லை.சிந்தித்துப் பார்ப்போம்! பிர்அவ்னிடமிருந்து மூஸா (அலை) அவர்கள்
அல்லாஹ்வின் அருளால் ஈடேற்றம் பெற்றதைப் போன்று மக்கா வெற்றியும் மகத்தான
ஈடேற்றமாகும்.இந்த இரண்டிற்கும் மத்தியில் ஒப்புமை இருந்தும் கூட அண்ணலார்
இதற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை.ஆக பிறந்த நாளிற்கும் இந்த ஹதீஸிற்கும்
சம்பந்தமில்லையெனும் போது இதனை வைத்து ஆதாரம் எடுப்பது ஏற்புடையதல்ல.

(3)நபி (ஸல்) அவர்கள் ஆஷுரா நாளன்று நோன்பு நோற்றதன் காரணம் மூஸா (அலை)
அவர்களின் ஈடேற்றம் மட்டுமல்ல மாறாக நபி (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்த
பொழுதே நோன்பு நோற்றார்கள் (ஆதாரம்:புகாரி)

எனினும் மதீனா வந்த பிறகு நபி
(ஸல்) அவர்களுக்கு, யஹுதிகளும் அன்றைய தினம் நோன்பு வைப்பதை அறிந்தார்கள்.எனவே
அதனை பேணும்படி கூறினார்கள்.பிறகு ரமலான் கடமையான பிறகு இதனை
மாற்றிவிட்டார்கள்.எனினும் விரும்பியவர்கள் நோற்பதற்கு அனுமதியளித்தார்கள்.ஆக
ஆஷுரா நோன்பின் அசலான காரணம் மூஸா (அலை) அவர்களின் ஈடேற்றம் அல்ல.எனினும் நபி
(ஸல்) அவர்கள் நோன்பின்  சிறப்பிலே இதனையும் சேர்த்து கொண்டார்கள்.

(4)நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களுக்கு ஆஷுரா நோன்புடன் ஒரு நோன்பை அதற்கு
முன்போ பின்போ சேர்க்கும்படி கூறினார்கள்.யஹுதிகளுக்கு ஒப்பாகிவிடக்கூடாது
என்பதினாலாகும்.இந்த ஹதீஸிலே அசலான சுன்னத்தானது ஒரு நாளிற்கு இல்லையெனும்
போது இந்த ஹதீஸின் மூலம் ஒரு நாளை மீலாத் விழாவாக கொண்டாட குறிப்பாக்குவதற்கு
என்ன ஆதாரம் உள்ளது? இதனை நடுநிலையோடு யோசிப்போம்!

(5) இந்த ஹதீஸானது மீலாத் கொண்டாடுவதற்கு ஆதாரமாக  இருந்திருந்தால் நபி (ஸல்)
அவர்கள் நபித்தோழர்கள், நல்லோர்களான இமாம்கள் அமல் செய்திருப்பார்கள். ஆனால்
அதன் பேரில் அவர்கள் அமல் செய்யவில்லை எனும் போதே அந்த அறிவிப்பிலே மீலாதிற்கு
அறவே ஆதாரமில்லை என்பதை புரியமுடிகிறது.

அல்லாஹூ அஃலம்.

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live