29 Nov 2016

தேவ்பந்தின் ஸ்தாபகர் அல் முஹத்திஸ் அல்லாமா காஸிம் நாநூதவீ ரஹ்.



📝📝📝📝📝📝


பெயர்:-  முஹம்மத் பின் காஸிம் நாநூதவீ.

பிறப்பு :-  ஹிஜ்ரி 1248 ம் ஆண்டு ஷஃபான் மாதம்
{1833 -01}உத்ரப் பிரதேஷின் சஹாரன்பூர் பகுதியிலுள்ள நாநூதா என்ற ஊரில் பிறந்தார்கள்.

இமாம் நாநூதவீ அவர்கள் சிறு பிராயத்திலிருந்து மார்க்கப்பற்றுள்ளவராகவே
காணப்பட்டார்கள். தனது சிறு வயதிலே அல் குர்ஆனையும் கற்று முடித்தார்கள்.அதன் பின் பல்வேறு இமாம்களினது நூற்களையும் ஹதீஸ் ,தப்ஸீர் பிக்ஹ் போன்ற கலைகளை படிப்பதிலும் மனனமிடுவதிலும் தனது நேரத்தை செலவு செய்தார்கள்

சிறு வயதிலே அவர்களிடம் விவேகமும் நல்ல மனன சக்தியும்
அறிவில் முதிர்ச்சியும் காணப்பட்டது.

ஆரம்பத்தில் தேவ்பந்தில் சிறிது காலம் படித்து விட்டு பின் சஹாரன்பூரிற்கு சென்று அங்கு கல்வி கற்றார்கள்.

ஹிஜ்ரி 1261 ம் ஆண்டு பேராசான் உஸ்தாத் மம்லூகுல் அலி அந்நாநூதவீ அவர்களுடன் டில்லி நோக்கிப் பயணமாகி அங்கு அஷ்ஷெய்ஹ் ஷாஹ் அப்துல் கனி அல் முஜத்திதீ அவர்களிடம் புஹாரி முஸ்லிம் திர்மிதீ ,முவத்தா போன்ற ஹதீஸ் கிரந்தங்களை படித்தார்கள்.

அல்லாமா அஹ்மத் அலி ஸஹாரன்பூரீ ரஹ் அவர்களிடத்தில் சுனன் அபீ தாவூத்
சுனன் நஸாயீ போன்ற கிரந்தங்களை படித்துக் கொண்டார்கள்.

டில்லியிலுள்ள மிக முக்கியமான அறிஞர்களிடம் கல்வி கற்ற இமாமவர்கள் அதன் பிறகு தனது ஆசானாகிய அஹ்மத் அலி ஸஹாரன்பூரீ ரஹ் அவர்களுடன் இணைந்து ஸஹீஹுல் புஹாரிக்கான தெளிவுரை எழுதுவதில் கவனம் செலுத்தினார்கள்.

இமாமவர்கள் சிறந்த ஆய்வாளராகவும் சிறந்த ஆசானாகவும் மக்கள் மத்தியில் இடம் பிடித்திருந்தார் பல் வேறு ஷரீஆ நூற்களையும் கற்பிப்பதில் சிறந்து விளங்கினார்கள் குறிப்பாக புஹாரி முஸ்லிம் போன்ற கிரந்தங்களுக்கு அவர்கள் வழங்குகின்ற விரிவுரைகள் அனைத்து அறிஞர்களாலும் அக்காலத்திலே போற்றப்பட்டது

ஷைஹுல் ஹிந்த் மௌலானா மஹ்மூத் ஹஸன் தேவ்பந்தி அல்லாமா பஹ்ருல் ஹஸன் கங்கோஹி அல்லாமா அஹ்மத் ஹஸன் அம்ரோஹி ,அஷ்ஷைஹுத் தபீப் மன்ஸூர் அலி அஷ்ஷைஹ் அப்துல் அலி மைரூதவீ போன்ற மாபெரும் ஹதீஸ் துறை மேதைகள் இமாம் நாநூதவீ அவர்களின் ஹதீஸ் விளக்க வகுப்புக்களில் வந்து அமர்ந்து உச்சகட்ட பயனடைந்துகொண்டார்கள.

ஹதீஸ் வகுப்புக்கள் விளக்கவுரைகள் ஏனைய பாடங்கள் என்று இமாமவர்களின் காலம் அறிவைத் தேடுவதிலும் அதனை பிறருக்கு கற்றுக் கொடுப்பதிலுமே கழிந்தாலும் எழுத்துத் துறையிலும் அவரது பங்களிப்பு மிக விசாலமானதாகவே காணப்பட்டது இமாமவர்கள் கிட்டத்தட்ட நாற்பதுக்கும் மேல் நூற்களை எழுதியுள்ளார்கள்.

அல்லாமா முஹம்மத் யஃகூப் நாநூதவீ அவர்கள் எழுதிய அல் இமாம் முஹம்மத் காஸிம் அந் நாநூதவீ கமா ராஅய்துஹு

الإمام محمد قاسم النانوتوي كما رأيته

என்ற நூலின் 34 , 35 ம் பக்கங்களில் இமாம் காஸிம் நாநூதவி அவர்கள் எழுதிய முப்பத்து நான்கு நூற்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை அல்லாமா நூர் ஆலிம் ஹலீல் அல் அமீனீ அவர்கள் எழுதி வெளியிட்டுள்ளார்கள்.

ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியாவை மீட்டெடுப்பதற்காகவும் அவர்களது சிந்தனைகளை விட்டும் மக்களை பாதுகாப்பதற்காகவும் அதிகமாக உழைத்தவர்களில் இமாமவர்களும் ஒருவர்.
அதன் விளைவாக இமாமவர்கள் ஜாமிஆ அல் இஸ்லாமிய்யா தாருல் உலூம் தேவ்பந்தை ஸ்தாபிப்பதில் அதிகம் கவனம் செலுத்தினார்கள்
அதற்கமைய ஹிஜ்ரி 1283 முஹர்ரம் மாதம் பிறை பதினைந்து வியாழக்கிழமை{1866- 05- 30} தேவ்பந்த் கலாசாலையை தமது தோழர்கள் சஹாக்களின் துணையுடன் ஸ்தாபித்தார்கள்.
அதன் பின்பு முராத் ஆபாத் என்ற பகுதியில்
மத்ரஸதுல் குரபா என்ற அரபுக் கலாசாலையையும் ஸ்தாபித்தார்கள்.
பிற்பட்ட காலங்களில் அது அல்ஜாமிஅதுல் காஸிமிய்யா என்ற பெயரில் அழைக்கப்பட்டது
அது போலவே கிலாஊடீ என்ற பகுதியில் மன்பஉல் உலூம் என்ற அரபுக் கலாசாலையையும் நிறுவினார்கள்.
இமாம் நாநூதவி அவர்கள் கிறிஸ்தவர்கள் இந்துக்கள் ஷீயாக்கள் போன்றவர்களின் கொள்கைகளுக்கு எதிராக அதிகம் போராடியுள்ளார்கள்
ஷீயாக்களின் வழிகெட்ட கொள்கைகளை விமர்சித்து ஹதிய்யுஷ் ஷீஆ هديةالشيعة எனும் நூலொன்றையும் இரண்டு பாகங்களில் எழுதியுள்ளார்கள்
அத்தோடு சமூக சேவைகளிலும் முன்னின்று உழைத்துள்ளார்கள்.

இமாமவர்களின் வபாத் :-
ஹிஜ்ரி 1297 ம் ஆண்டு ஜுமாதல் ஊலா மாதம் பிறை நான்கு வியாழக்கிழமை
{ 1880-04-15 }ழுஹர் தொழுகைக்குப் பின் வபாத்தானார்கள்.
இமாமவர்கள் பற்றி எழுதப்பட்ட நூற்களில் சில:

«الإمام محمد قاسم النانوتوي كما رأيته» للشيخ يعقوب النانوتوي - تعريب فضيلة الأستاذ محمد عارفجميل القاسمي المباركفوري.

அல்லாமா
முஹம்மத் யஃகூப் நாநூதவீ அவர்கள் அல் இமாம் முஹம்மத் காஸிம் அந்நாநூதவீ கமா ராஅய்துஹு
என்று நூலொன்றை எழுதியுள்ளார்கள்

அதனை உஸ்தாத் முஹம்மத் ஆரிப் ஜமீல் அல் காஸிமீ அல் முபாரக்பூரீ அவரகள் அரபாக்கம் செய்துள்ளார்கள்.

«الإمام محمد قاسم النانوتوي» للشيخ خالد سيف الله الرحماني

அஷ்ஷைஹ் ஹாலித் ஸைபுல்லாஹ் ரஹ்மானீ அவர்கள் அல் இமாம் முஹம்மத் காஸிம் அந்நாநூதவீ என்று நூலொன்றையும் எழுதியுள்ளார்கள்.

سوانح قاسمي» للشيخ مناظر أحسن الغيلاني

அஷ்ஷைஹ் முனாழிர் அஹ்ஸன் அல்கைலானீ அவர்கள் ஸவானிஹ் காஸிமீ என்று நூலொன்றையும்.

مولانا قاسم نانوتوي، حيات وكارنامے» للشيخ أسير أدروي

அஷ்ஷைஹ் அஸீர் அத்ரவீ அவர்கள் மௌலானா காஸிம் நாநூதவீ ஹயாத் வகார்நாமே என்ற நூலொன்றையும் உருது மொழியில் எழுதியுள்ளார்கள்.

 المراجع
«دارالعلوم ديوبند» للشيخ عبيد الله الأسعدي
الإمام محمد قاسم النانوتوي» للشيخ خالد سيف الله الرحماني،
مولانا قاسم نانوتوي، حيات وكارنامے» للشيخ أسير أدروي،
«سوانح قاسمي» للشيخ مناظر أحسن الغيلاني،

எங்களுடைய அன்புக்குரிய இமாமவர்களை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக சுவனத்தின் உயர்ந்த பதவியையும் அன்னாருக்கு வழங்குவானாக!!!

TM முபாரிஸ் ரஷாத
ஹதீஸ் துறை விரிவுரையாளர்
பாதிஹ் கல்வி நிறுவனம் - திஹாரி

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live