6 Aug 2016

யார் அந்த தேவ்பந்த் உலமாக்கள்?சரித்திரம் படைத்தவர்கள் மறைந்தாலும் படைப்புகள் மறைந்து விடாது. உண்மை உறங்கினாலும் முடங்கிவிடாது. உண்மையை ஊனமாக்காமல் காப்பவர்கள் உலமாக்கள். அதில் தேவ்பந்த் உலமாக்களின் பங்கு அலாதியானது. தாருல் உலூம் தேவ்பந்த் , மார்க்க அறிவின் ஊற்றுக்கண். அது பொங்கி வழிந்து கொண்டே இருக்கும். இந்திய துணைக் கண்டத்தையும் தாண்டி உலகம் முழுவதும் பெருக்கெடுத்து ஓடுகிறது. இஸ்லாத்திற்கு உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் ஏற்பட்ட குழப்பங்களை களையெடுப்பதற்காக தேவ்பந்த் உலமாக்கள் தலையில் கஃபன் துணியை கட்டிக்கொண்டு களமிறங்கினார்கள். அவர்களுடிடய சரித்திரம் உண்மையான மார்க்க ரோஷத்தை படம் பிடித்துக் காட்டுகிறது.
அல்லாஹ் அவர்களை தக்க தருணத்தில் படைத்ததின் மூலம் இந்தியாவில் மட்டுமல்ல: முழு உலகிலும் ஏற்படவிருந்த வீழ்ச்சியை வீரியமிழக்கச் செய்தான். தேவ்பந்த் மூலம் ஏற்பட்ட மார்க்க மறுமலர்ச்சி உலகையே வியக்கச் செய்திருக்கிறது. ஆனால் இன்று தேவ்பந்த் என்று சொன்னால் சிலருக்கு மிளகாயை கடித்தது போல் இருக்கிறது. அசத்தியத்தின் பாரம்பரியத்தில் வந்தவர்களுக்கு சத்தியத்தை கேட்பதற்கு அப்படித் தான் இருக்கும்.  இந்தியாவில் குர்ஆன் ஹதீஸுடைய அறிவு மங்கிப் போயிருந்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட தாருல் உலூம் இன்று மார்க்க மேதைகள் ஆச்சரியப்படுமளவுக்கு மாபெரும் சேவையாற்றிக் கொண்டிருக்கிறது. 1912 ஆம் ஆண்டு எகிப்தைச் சார்ந்த மார்க்க அறிஞர் ரஷீத் ரளா அவர்கள் தேவ்பந்த வந்த போது, பிரமிக்க வைக்கும் உங்களுடைய மார்க்கப் பணிக்கு உலக முஸ்லிம்கள் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறார்கள். இந்த மத்ரஸாவை நான் பார்க்கவில்லையானால் இந்தியாவிலிருந்து பெரும் கவலையோடு திரும்பியிருப்பேன், என்று புகழாரம் சூட்டினார்.
இந்தியாவில் குர்ஆன்: 

இந்திய முஸ்லிம்கள் மாற்று மதத்தினரோடு கலந்திருப்பதாலும் குர்ஆன், ஹதீணு பற்றிய முறையான போதனை இல்லாததாலும் மாற்றுமத கலாச்சாரமும் சடங்குகளும் அவர்களிடம் புரையோடிக் கிடந்தன. கிரேக்க தத்துவத்தில் காட்டிய ஆர்வத்தை மக்கள் குர்ஆன், ஹதீஸில் காட்டவில்லை. ஷாஹ் வலியுல்லாஹ் (ரஹ்) அவர்கள் குர்ஆனுடைய போதனையை பரவலாக்குவது தான் இதற்கு ஒரே தீர்வு, என்பதை உணர்ந்தார்கள்.
அது வரை இந்தியாவில் குர்ஆன் பிராந்திய பாஷையில் மொழி பெயர்க்கப்படவில்லை. ஹிஜ்ரி 1150 ஆம் ஆணடில் முதன் முதலாக ஃபார்சீ மொழியில் குர்ஆனை ஷாஹ் ஸாஹிப் (ரஹ்) அவர்கள் மொழிபெயர்த்தார்கள். பின்னர், அவர்களுடைய மகன் ஷாஹ் அப்துல் காதிர் தஹ்லவீ (ரஹ்) அவர்களும் மற்றொரு மகன் ஷாஹ் ரஃபீவுத்தீன் (ரஹ்) அவர்களும் உர்துவில் குர்ஆனில் மொழி பெயர்த்தார்கள். எந்த இஸ்லாமிய  ஆட்சியும் நிகழ்த்த முடியாத மாபெரும் சீர்த்திருத்தப் புரட்சியை இந்த குர்ஆன் மொழிபெயர்ப்பு நிகழ்த்தியிருக்கிறது, என்று அபுல் ஹஸன் அலீ நத்வீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
நமக்குக் கிடைத்த நபிமொழி:

ஹதீஸ் கலையிலும் மக்கள் பின்தங்கியிருந்தனர். மிஷ்காத் படித்துவிட்டால் அவரை பெரிய ஹதீஸ் கலை வல்லுணராக மக்கள் கருதினர். இந்த நிலையை மாற்றுவதற்காக ஷாஹ் வலியுல்லாஹ் (ரஹ்) அவர்கள் அரபு நாட்டுக்கு சென்று ஸிஹாஹுஸ்ஸித்தா எனும் ஆறு நபிமொழிக் கிரந்தங்களை நேரடியாக அதற்குரிய உஸ்தாதிடம் பயின்றுவிட்டு இந்தியாவுக்கு வந்து ஹதீஸ் பாடத்தை நடத்த ஆரம்பித்தார்கள். நம் தேசத்திற்கு ஷாஹ் (ரஹ்) அவர்கள் மட்டும் கிடைக்க வில்லையானால் நமக்கு ஹதீஸ் வந்து சேர்ந்திருக்குமா? என்பது கேள்விக்குறி தான்.
சர்வதேச களப்பணி:

முழு உலக முஸ்லிம்களும் இந்திய உலமாக்களுக்கு நன்றி செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறார்கள். ஏனெனில், இந்தியாவுக்கு ஹதீஸ் வந்த காலத்தில் ஏறத்தாழ உலகின் எந்தப் பகுதியிலும் நபிமொழிக்கு முழுமையாக சேவை செய்ய ஆளில்லை. அல்ஹதீஸ் வல் முஹத்திசூன் என்ற நூலின் ஆசிரியர் தம்முடைய நூலில் கூறுவதாவது:

தாத்தரியிரால் பக்தாதில் இஸ்லாமிய ஆட்சி வீழ்ந்த போது மார்க்க சேவை வலுவிழந்தது. அச்சமயம் எகிப்து உலமாக்கள் முன்வந்து நபிமொழிக்கு பணிவிடை செய்தார்கள். ஹிஜ்ரி பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எகிப்திலும் பின்னடைவு ஏற்பட்டது. இச்சமயத்தில் தான் இந்திய உலமாக்கள் முன்வந்து மாநபியின் வார்த்தைகளை வாழவைப்பதற்காக அரிய பணி செய்தார்கள். அந்த சேவை (நான்கு நூற்றாண்டுகளாக) இன்று வரை தொடர்கிறது. இஸ்லாமிய நாடுகளிலேயே இந்திய இன்று வரை ஹதீஸ் கலையால் நற்பாக்கியம் பெற்ற நாடாகத் திகழ்கிறது. (கிருத்தவக் கொள்கைககு எதிராக) ஆங்கிலேயர்களிடம் (தேவ்பந்த் உலமாக்கள்) விவாதம் செய்து சத்தியத்திற்கு உதவியவர்கள் இந்திய உலமாக்கள். மேற்கத்திய நாகரிகம் அவர்களுடைய கொள்கைகளை தடம் புரளச் செய்வதற்குப் பதிலாக தடம் பதியச் செய்தது, ஆச்சரியத்திலும் ஆச்சரியம், என்று புருவத்தை உயர்த்துகிறார், நூலாசிரியர். (பக்: 438-441)

தேவ்பந்த மத்ரஸாவுக்கு வருகை புரிந்த ரஷீத் ரளா அவர்கள் தங்களுடைய மிஃப்தாஹு கூனூஸிஸ்சுன்னா என்ற நூலின் முன்னுரையில் இந்திய உலமாக்கள் மட்டும் நபிமொழிக்கு நற்சேவை புரிய களமிறங்கவில்லையானால் கிழக்கத்திய நாடுகளில் ஹதீஸ்கலையே காணாமல் போயிருக்கும், என்று கூறியுள்ளார்.
பெர்சனல்லா போர்ட் தந்த தேவ்பந்த்:

1972 ஆம் ஆண்டு பொது சிவில் சட்டம் பற்றிய சர்ச்சை விஸ்வரூபம் எடுத்தது. இதை முடிவுக்குக் கொண்டுவர தேவ்பந்த் உலமாக்கள் பெருமுயற்சி எடுத்தனர். தாருல் உலூம் தேவ்பந்துடைய அப்போதைய முதல்வர் மொலானா காரீ தைய்யிப் (ரஹ்) அவர்கள் தேசிய உலமாக்களை ஒன்றிணைத்து தேவ்பந்தில் பல கலந்தாய்வுக் கூட்டங்களை நடத்தினார்கள்.
இறுதியாக 1972 ஆம் ஆண்டு டிசம்பர் 27, 28 ஆகிய தேதிகளில் பொதுசிவில் சட்டத்தின் விளைவுகள் மற்றும் தனியார் சட்டத்தின் முக்கியத்துவம் பற்றி விளக்கி மாபெரும் மாநாடு நடைபெற்றது. ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் பங்கேற்றனர். இம்மாநாடு பிரசவித்ததது தான் காரி தைய்யிப் ஸாஹிப் (ரஹ்) அவர்களின் தலைமையில் உதயமான முஸ்லிம் தனியார் சட்ட வாரியம். தேவ்பந்த் தேடித்தந்த வாரியம் இன்று வரை இயங்கிக் கொண்டிருக்கிறது. தனியார் சட்டத்திற்கு ஆபத்து நேரும்போதெல்லாம். தேவ்பந்த் தன் பொறுப்பை மறக்கவில்லை.
ஷாஹ்பானு வழக்கில் நீதிமன்றமே குர்ஆனுக்கு தவறான விளக்கம் கொடுத்த போது வெகுண்டெழுந்து மறுப்பு கொடுத்தது. தாருல் உலூம் தேவ்பந்துடைய ஃபத்வாவுக்கு இந்திய அரசு தனி மரியாதை கொடுக்கிறது. தேவ்பந்த் முழூ இந்திய முஸ்லிம்களின் பிரதிநிதி என்று சொன்னாலும் மிகையாகாது.
ஃபத்வா எனும் மார்க்கத் தீர்ப்பு:

தேவ்பந்திலிருந்து லட்சோப லட்சம் ஃபத்வாக்கள் வெளியாகிவிட்டன. ஹிஜ்ரி 1329 முதல் 1419 ஆம் ஆண்டு வரை (பதிவு செய்யப்பட்ட ஃபத்வாக்கள் மட்டும்) ஏழு லட்சத்தை விட அதிகம். ஆங்கிலேய வரலாற்றாசிரியர் ஒருவர் தி முஸ்லிம்ஸ் ஆஃப் பிரிட்டிஷ் இந்டியா என்ற தம்முடைய நூலில், இந்திய முஸ்லிம்களை மூளைச்சலவை செய்வதற்கு தேவ்பந்த உலமாக்களுடைய ஃபத்வாக்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. (நூல்: முதாலஆ பரேலவிய்யத்)
எனவே தான் ஆங்கிலேயர்கள் ஷைகுல் ஹிந்த் (ரஹ்) அவர்களை மால்டா சிறையில் வைத்து ஆங்கிலேயனுக்கு ஆதரவாக ஃபத்வா கொடுக்கும்படி நிர்பந்தித்து இடுப்பில் இரும்பை பழுக்கக் காய்ச்சி சூடு போட்டனர். அவர்களுடைய ஜனாஸாவை குளிப்பாட்டும் போது இடுப்பில் எலும்பு தான் இருந்தது. சதை இருக்கவில்லை.

தேவ்பந்த் உலமாக்களில் முக்கியமானவர்களில் ஒருவரான முஃப்தி கிஃபாயதுல்லாஹ் (ரஹ்) அவர்களுடைய ஃபத்வாவைப் பார்த்துவிட்டு எகிப்திய உலமாக்கள், நாங்கள் இப்படியொரு ஆலிமை உலகில் இதுவரை கண்டதில்லை, என்று கூறினர். இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர் முஸ்லிம்களை கிருத்தவர்களாக்க திட்டம் தீட்டினர், ஆங்கிலேயர்கள். மேற்கத்திய சிந்தனையுடன் கூறடி கல்விக் கொள்கையை அமுல் படுத்தினர். காவல் துறை துணையுடன் இஸ்லாமிய கொள்கைகள் மீது பாதிரிமார்கள் சேற்றை வாரி வீசினர். 800 ஆண்டுகாலம் முஸ்லிம்கள் ஆட்சி செய்த ஸ்பெயினுடைய நிலை யாரும் அறியாததல்ல. சரித்திர ஆசிரியர்கள் இந்தியாவிலும் ஸபெயினுடைய வரலாற்றை எழூதுதவதற்காக பேனாவை எடுத்துக்கொண்டு தயாராக இருந்த சமயம் மார்க்க ரோஷமுள்ள இரண்டு தியாகிகள் தலையில் கஃபன் துணியை கட்டிக்கொண்டு களமிறங்கினர். 1. ரஹ்மதுல்லாஹ் கீரானவீ (ரஹ்) 2. காஸிம் நானூத்தவீ (ரஹ்)  இவ்விருவரும் இஸ்லாத்திற்கு எதிரான கொள்கையுடையவர்களிடம் விவாதம் செய்து எதிரணியனரை தோல்வியுறச் செய்து ஓட ஓட விரட்டியடித்தனர்.

moulana nijamudeen yusufi

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live