29 Jul 2016

கபுறுகளை உயர்த்திக் கட்டுவது பற்றி ஓர் உணர்வூட்டும் அறிவுரை

கபுறுகளை உயர்த்திக் கட்டுவது ஷரீஅத்திற்கும் அவ்லியாக்களுக்கும் முரணான செயல்!


                            


அவ்லியாக்களை கண்ணியப்படுத்த வேண்டும் என்பதற்காக அவர்களுடைய கபுறுகள் உயர்த்திக் கட்டப்படுகின்றன. கண்ணியம் செலுத்தும் முறை இதுவல்ல. இதுவோ ஷரீஅத் தால் "ஹராம்' என்று அறிவிக்கப்பட்ட செயல். ஹராமான செயலைச் செய்து யாரையும் கண்ணியப்படுத்த இயலாது. அழகாகவும் ஆடம்பரமாகவும் கட்டப்பட்ட கபுறுகளில்தான் அவ்லியாக்கள் மரியாதையோடு இருப்பார்கள் என்று நினைப்பது தவறு. மண்மூடிக்கிடக்கும் சாதாரண கபுறுகளிலும் அவர்கள் தகுந்த கண்ணியத்தோடும் சிறப்போடும்தான் இருப்பார்கள்.
மண்மூடி மேடுதட்டிக் கிடக்கும் சாதாண கபுறுகளில் வீசும் பிரகாசம், உயர்த்திக் கட்டப்பட்ட ஆடம்பர கபுறுகளில் கண்டிப்பாக இருக்காது என்பதே உண்மையாகும். மன்னர்கள், மன்னாதிமன்னர்கள், அமைச்சர்கள், தளபதிகள் போன்றோரின் கபுறுகள்தாம் உயர்த்தி ஆடம்பரமாக கட்டப்படுகின்றன. மன்னர்களின் கபுறுகளிலும் அரசர்களின் கபுறுகளிலும் எங்கிருந்து வீசும் ஒளி? உயிரோடு வாழும்போதே உடம்பைப் பற்றியும் உலக வழ்க்கையைப் பற்றியும் பெரிதாக அலட்டிக் கொள்ளாதவர்கள் இறந்தபின்பா தங்களுடைய கபுறுகள் உயர்த்திக் கட்டப்படவேண்டும் என்று ஆசைப்படுவார்கள்?

மார்க்கத்தை விட்டு வெகுதூரம் விலகி உலக ஆசாபாசங்களில் மூழ்கிப்போய்க் கிடந்த அரசரகளுக்கும் அமைச்சர்களுக்கும் தான் தங்களுடைய கபுறுகளை உயர்த்திக் கட்ட வேண்டும் எனும் இம்மாதிரியான எண்ணம் பிறக்கும். மார்க்கத்தை நேசிப்பவர்களுக்கும் மார்க்க நேசர்களோடு நெருக்கமாய் உள்ளோருக்கும் இம்மாதிரியான எண்ணம் உதிக்கவே உதிக்காது.
மெளலானா கங்கோஹி அவர்களுக்கு ஒரு மனிதர் விலையுயர்ந்த ஜாக்கெட்(மேலாடை) ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார். அதை அணியுமாறு கேட்டுக் கொண்டார். மெளலானாவோ அதனை ஒரு நவாபுக்குக் கொடுத்து விட்டார்கள். "நீங்கள் அணிந்துள்ள ஆடைகளின் மீதாக இதை அணிந்து கொண்டால் மிகவும் பொருத்தமாக இருக்கும். என்னுடைய எளிமையான ஆடைகளோடு இது சேராமல் உறுத்திக் கொண்டிருக்கும். அத்தோடு பூச்சி பொட்டு அணுகாமல் இதனை பாதுகாத்து வேறு வரவேண்டும். என்னால் அதுவும் இயலாது. ஆகையால், நீங்கள் இதை அணிந்து கொள்ளுங்கள்' என்று கூறிவிட்டார்கள். உயிரோடு உள்ள உடம்புக்கே இம்மாதிரியான அழகு அலங்காரங்களை அவர்கள் விரும்பவில்லை எனும்போது கபுறுகளுக்கா விரும்புவார்கள்? கண்டிப்பாக விரும்ப மாட்டார்கள்.

எதற்காக நாம் கபுறுகளை ஜியாரத் செய்கிறோம் என்பதை மனதில் கொண்டாலும் இந்த உயர்ந்த கபுறுகள் தவறு எனும் முடிவிற்கே வரமுடியும். மரணத்தை நினைத்துப் பார்க்க வேண்டும்; மரண நினைப்பு மனதில் உதிக்கவேண்டும் என்பதற்காகத்தான் கபுறுகளை ஜியாரத் செய்யுமாறு ஷரீஅத் கட்டளையிட்டுள்ளது. வெறிச்சோடிப் போய் பாழடைந்து கிடக்கும் கபுறுகளைப் பார்க்கும்போதுதான் நமக்கு மரண நினைப்பு வரும். இந்த உலக வாழ்க்கை வீணே எனும் எண்ணம் எழும். அலங்காரத்தோடு கம்பீரமாக உயர்ந்து நிற்கும் மாடங்களைப் பார்க்கும்போது கண்டிப்பாக வராது. இத்தகைய உயர்ந்த கபுறுகளைப் பார்க்கும்போது அங்கு அடங்கியுள்ள அவ்லியாக்களின் மீதான கண்ணியமும் மதிப்பும் மனதில் உயருகின்றதே என்று கூறப்படுகின்றது. ஆராய்ந்து பார்த்தால் அது தவறென்று புரிந்து கொள்ளலாம். ஒப்பாரிக்குரல் கேட்டு அழும் பெண்களைப் போன்றது அது. உண்மையான அன்பு மனதில் இருந்தால் சோகம் பொத்துக் கொண்டு வரவேண்டும். ஒப்பாரிப் பாடல்களைக் கேட்டால் தான் அழுகை வரும் என்றால், ஷுஹதாக்களின் வீரதீர பெருமைகளை பட்டியலிட்டால் தான் அழுகை வரும் என்றால் அது போலி அழுகை, பொய்யான அழுகை!

ஸஹாபாக்களுக்கு அண்ணலெம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது அன்பும் பாசமும் இல்லை என்று யாரேனும் சொல்லமுடியுமா? ஸஹாபாக்களைப் போன்று அண்ணலாரை நேசித்தவர்கள் உலகில் யாருமே கிடையாதே! அண்ணலார் ஒழு செய்தபிறகு கீழே விழும் தண்ணீரைக் கூட கீழே சிந்தவிடாமல் கையிலேந்தி தங்களுடைய உடம்புகளில் பூசிக்கொள்ளும் அளவுக்கு அவர்களுடைய அன்பு எல்லையில்லாமல் இருந்ததே! அண்ணலார் மீது அந்தளவுக்கு அன்பும் பாசமும் கொண்டவர்கள் அண்ணலாரின் கபுறை உயர்த்தியா கட்டினார்கள்?

கபுறுகளை உயர்த்திக் கட்டக்கூடாதென்று அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தடை செய்திருந்த காரணத்தினால் அவர்களுடைய கபுறை சாதாரணமான மண்மேடாகவே விட்டிருந்தார்கள். உண்மையிலேயே அன்பும் மரியாதையும் மனதில் இருந்தால் கபுறுகளை உயர்த்திக் கட்டாமல் அப்படியே விட்டு வைக்கவேண்டும்.

நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கற்றுக்கொடுத்த முறை இதுதான். தங்களுடைய வாழ்நாளில் அண்ணலாரின் வழிமுறைகளை அப்படிக்கு அப்படியே பின்பற்றவேண்டும், அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வாழ்ந்து காட்டியது போல வாழவேண்டும் என்பதற்காக எல்லாவகையான தியாகங்களையும் அர்ப்பணிப்புகளையும் அவ்லியாக்கள் செய்தார்கள் என்பதை நாமறிவோம். அண்ண லாருடைய சந்தோம் எதில் உள்ளதோ அதில்தான் அவ்லியாக்களின் சந்தோஷமும் உள்ளது!.

அவ்லியாக்களின் நினைவும் ஞாபகமும் கபுறுகளை உயர்த்திக் கட்டினால்தான் இருக்கும்; நினைவும் ஞாபகமும் இருந்தால்தான் அவர்களை நாம் கண்ணியப்படுத்த முடியும் என்றெல்லாம் கூறப்படுகின்றது. அவர்களுடைய நினைவையும் பெருமையையும் தக்கவைப்பதுக்கு இறைவனே போதுமானவன். என்னதான் செய்தாலும் அவர்களுடைய நினைவை நாம் போற்ற முடியாது. ஆடம்பரமாகவும் அற்புதமாகவும் கட்டப்பட்டுள்ள எத்தனையோ கபுறுகளில் அடங்கியுள்ளவர்கள் யாரென்றே நமக்குத் தெரியாது; அவர்களுடைய பெயர்களையும் நாமறிய மாட்டோம். இறைவனிடம் அவர்கள் பெற்றுள்ள நெருக்கமும் இறைவனுடைய தொடர்பும்தான் அவர்களுக்கு மரியாதையையும் கண்ணியத்தையும் பெற்றுத் தருமே அல்லாமல் உயர்த்திக் கட்டப்பட்டுள்ள அவர்களுடைய கபுறுகளால் அவர்களுக்கு எந்தப் பெருமையும் கிடையாது.

இன்னொரு வியத்தையும் நாம் காணலாம். சுன்னத்தை விடாப்பிடியாக பின்பற்றியவர் என்று மக்கள் கருதும் அவ்லியாக்களின் கபுறுகளை உயர்த்திக் கட்டாமல் மண் மேடாகவே வைத்துள்ளனர். வருடந்தோறும் அதற்கு மேலாக மண்ணைக் குழைத்து பூசிவருகிறார்கள். சுன்னத்தை கடைப் பிடிக்காதவர் என்று கருதப்படுபவர்களின் கபுறுகளைத்தான் உயர்த்திக் கட்டுகிறார்கள். இது என்ன பழக்கம் என்று தெரியவில்லை. ஷைக் குத்புத்தீன் பஃக்தியார் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களுடைய கபுறு சர்வசாதாரணமாக மண்மூடிக் கிடக்கின்றது. அதை "தரிசிக்க' பெண்களும் வருவதில்லை. ஏனென்று காரணம் கேட்டால், "அவர் (முத்தபிஉஷ் ஷரீஅத்) ஷரீஅத்தை கண்ணெனப் போற்றியவர். ஆகையால், இத்தகு செயல்களை நாங்கள் செய்வதில்லை' என்று அங்குள்ள முஜாவர்கள் கூறுகிறார்கள்.

தாம் பெரிதாய் நம்பும் மற்ற அவ்லியாக்களுக்கு இதன் மூலம் மக்கள் அவமரியாதை செய்கிறார்கள். அவர்கள் ஷரீஅத்தை மதிக்காதோர் என்று சொல்லாமல் சொல்கிறார்கள். இதன் காரணமாகவும் உயர்த்திக் கட்டுவது தவிர்க்கப்பட வேண்டும்.

0 comments:

Post a Comment

 

makkah live

Sample Text

madina live