அண்மையில் மௌலானா சுல்தான் பாகவி அவர்கள் கிதாபுகளில் செய்த இருட்டிப்பு என்ற தலைப்பில் மௌலூது குறித்து தாருல் கிதாப் தேவ்பந்து இருட்டடிப்பு செய்துள்ளார்கள் என்று பேசிய வீடியோ காணமுடிந்தது.
👉🏻அந்த வீடியோவை இங்கே பாருங்கள்👈🏻
அதைப்பற்றி ஆய்வு செய்த போது எனக்கு கிடைத்த தகவலை நான் பதிவு செய்துள்ளேன்.
இது வீண்விவாதம் என்றெல்லாமல் ஒரு ஆய்வு கண்ணோட்டத்தில் இல்மீ முனாகஷாவாக இதை நான் எடுத்துக் கொண்டேன். தஹ்கீகை விரும்பக்கூடியவர்கள் இதனை வாசித்து பயனடைவீர். அல்லாஹ் அதற்கு தவ்ஃபீக் செய்வானாக!
மௌலானா சுல்தான் பாக்கவி அவர்கள் கூறுவது:
அசல் பிரதியான முஹத்திஸ் இஸ்ஹாக் தெஹ்லவி அவர்களின் பிரதியில் வந்திருக்ககூடிய வாசகம்:
كنتُ أصنع طعاماً في أيام المولد صلة بالنبي صلى الله عليه وسلم
புதிய பதிப்பில் வந்திருக்கின்ற வாசகம்:
كنت أصنع طعاماً صلة بالنبي صلى الله عليه وسلم
பதிப்புகள் குறித்து அறிமுகம் :
நம்முடைய நாட்டில் இருந்த பழைய பதிப்புகளின் வரலாறு மற்றும் அதை அச்சிட்ட பதிப்பகளின் வரலாறு குறித்து அறிய நாம் கடமைப்பட்டுள்ளோம். குறிப்பாக طبعة حجيرة பற்றிய தகவல்கள்.
மன்ஹஜு த் தஹ்கீக் வளர்ந்த பிறகு தஹ்கீக் உடைய உசூல்களை பின்பற்றி இன்றைய காலத்தில் ஒரு கிதாபை ஆய்வு செய்து வெளியிடுபவரை முஹக்கிக் محقق என்று அழைக்கிறோம்.
ஆனால் طبعة حجيرة உடைய காலத்தில் அந்தந்த مطبع பதிப்பகத்தில் தலை சிறந்த ஆலிம்கள் இருப்பார்கள். அவர்களின் ஆய்வின் அடிப்படையில் கிதாபுகள் அச்சிடப்படும். அவர்களுக்கு முஸஹ்ஹிஹ் مصحح என்று சொல்லப்படுகிறது.
கையெழுத்துப் பிரதி மற்றும் அச்சுப் பிரதி இடையிலான வேறுபாடு
- கையெழுத்துப் பிரதி என்பது மனிதன் தன் கரத்தால் சுயமே எழுதியவை. அதில் பல்வேறு கையெழுத்து வடிவங்கள் இடம் பெற்றிருக்கும். அச்சுப் பிரதி இயந்திரத்தால் வடிவமைக்கப்படுவது.
- ஒரு கிதாப் அதன் ஏதேனும் கையெழுத்துப் பிரதியை முன்வைத்து பதிப்பகத்தில் அச்சிடப்பட்டு நூலாக வடிவமைக்கப்படுகிறது.
- சில நேரங்களில் ஒரு கிதாப் இரண்டு, மூன்று கையெழுத்துப் பிரதிகளை வைத்து கூட ஆய்வு செய்து அச்சிடப்பட்டிருக்கும்.
கையெழுத்துப் பிரதிக்கு தான் முதல் அந்தஸ்து கொடுக்கப்படும். அச்சிடப்பட்ட பிரதிக்கு இரண்டாம் நிலை தான் என்பது கிதாபுகளை ஆய்வு செய்யும் முஹக்கிகீன்களின் உசூல்களில் ஒன்று.
ஒரு கிதாபுடைய نص ல் கூடுதல், குறைவு சிக்கலின் போது என்ன செய்ய வேண்டும்?
ஒரு கிதாபுடைய نص ல் கூடுதல் குறைவு சிக்கல் உள்ளது. உதாரணமாக ஒரு طبعة வில் ஒரு வாசகம் இடம் பெற்றுள்ளது. மற்றொரு طبعة வில் அந்த வாசகம் இடம்பெறவில்லை. உடனே பழைய طبعة வில் உள்ளதை எடுத்துக் கொள்வோம். புதிய طبعة வில் உள்ளதை விட்டு விடுவோம் என்று சொல்வது தவறான நிலைப்பாடாகும். அதைவிட அபத்தபானது பழைய طبعة வில் இருப்பது தான் சரி. புதிய طبعة வில் பதிப்பில் தஹ்ரீஃப் அதாவது நீக்கம் செய்துவிட்டார்கள் என்று சொல்வதாகும்.
நேரடியாகவே விஷயத்திற்கு வருவோம். அத்துர்ருஸ் ஸமீன் ஃபீ முபஷ்ஷராதின் நபிய்யில் அமீன் என்ற கிதாபில்
كنت أصنع طعاماً في أيام المولد صلة بالنبي صلى الله عليه وسلم
என்ற வாசகம் 1899 ல் அஹ்மதி பதிப்பகத்தால் அச்சிடப்பட்ட நூலில் இடம் பெற்றுள்ளது.
كنت أصنع طعاماً صلة بالنبي صلى الله عليه وسلم
என்று மட்டுமே உள்ளது.
இந்நிலையில் பழைய பதிப்பில் இடம் பெற்றதே சரி. பின்னால் அச்சிட்டவர்கள் தஹ்ரீஃப் செய்துவிட்டார்கள் என்று சொல்வது சரியல்ல. அப்படி சொல்வது இல்மீ அனுகுமுறையும் அல்ல.
இதுப்போன்ற சிக்கலில் முஹக்கிகீன்களின் சரியான அணுகுமுறை
ஒரு பதிப்பில் ஒரு வாசகம் இடம் பெற்றுள்ளது. மற்றொரு பதிப்பில் அந்த வாசகம் இடம்பெறவில்லை என்றால் அந்த مخطوطة கள் எந்த கையெழுத்துப் பிரதியை முன்வைத்து அச்சிடப்பட்டது என்பதை ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வுக்கு பிறகே அதில் நாம் விடைகாண முடியும்.
கூடுதல் வார்த்தை في ايام المولد இடம் பெற்ற பதிப்பு
1899ல் மௌலான செய்யது ளஹீரு தீன் அவர்கள் மூலமாக அஹ்மதி பதிப்பகத்தில் அச்சிடப்பட்ட طبعة எந்த கையேட்டு பிரதியை முன்வைத்து அச்சிடப்பட்டது என்ற விவரங்கள் அந்த பதிப்பில் பதிவு செய்யப்படவில்லை.
கூடுதல் வார்த்தை في ايام المولد இடம் பெறாத பதிப்பு
1418ல் மௌலானா ஆஷிக் இலாஹி பரனி அவர்கள் மூலமாக தாருல் கிதாப் தேவ்பந்து பதிப்பகத்தில் அச்சிடப்பட்ட பதிப்பு எந்த கையேட்டு பிரதியை முன்வைத்து அச்சிடப்பட்டது என்ற விவரங்கள் அந்த பதிப்பில் பதிவு செய்யப்படவில்லை.
ஆனால் அவர்களின் மகனார் மௌலானா அப்துர் ரஹ்மான் கவ்ஸர் பரனி அவர்களை தொடர்பு கொண்டு விவரங்கள் கேட்டபோது தன்னுடைய தந்தை கையெழுத்துப் பிரதியை முன்வைத்தே இந்நூலை தஹ்கீக் செய்து வெளியிட்டார் என்ற தகவலை பகிரந்தார்கள்.
1443ல் மௌலானா நூருல் ஹஸன் ராஷித் காந்தலவி அவர்கள் மூலமாக முஃப்தி இலாஹி பஃக்ஷ் அகாடமியில் அச்சிடப்பட்ட கிதாப் 2 அசல் கையெழுத்துப் பிரதிகளை வைத்து அச்சிடப்பட்டது. இந்நூலுக்கு இந்த இரண்டு கையெழுத்துப் பிரதிகள் மட்டுமே இருக்கின்றன என்ற தகவலை நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்கள்.
அந்த இரண்டு கையெழுத்துப் பிரதிகளும் ஹிஜ்ரி 1253 அதாவது ஆங்கில வருடக்கணக்கு படி 1837 ஆம் ஆண்டு முஃப்தி அப்துல் கய்யூம் பதானவி அவர்கள் மூலமாக எழுதப்பட்டது என்ற தகவல் இங்கு மிகவும் முக்கியமாக கவனிக்க வேண்டியது.
ஆய்வின் இறுதி
கிதாபை ஆய்வுசெய்து அச்சிடுவதற்கான உசூல் என்ன?
- கிதாபை தஹ்கீக் செய்யக்கூடிய ஒரு முஹக்கிக் உடைய பணி அந்த நூலின் கையெழுத்துப் பிரதிகளில் எது காலத்தால் முந்தியது என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
- அப்படி முந்திய பிரதியை தேர்வு செய்து அதில் இடம்பெற்றுள்ள نص வார்த்தைகளை அப்படியே பதிவு செய்ய வேண்டும்.
- ஆய்வின் போது முஹக்கிக் தன் தரப்பிலிருந்து கொடுக்கக்கூடிய விளக்கங்களை ஹாஷியாவில் தான் பதிவு செய்ய வேண்டும். நூலாசிரியரின் அசல் نص ல் அதாவது அசல் வார்த்தையில் பதிவு செய்ய முடியாது. அப்படிசெய்ய வேண்டுமானால் அதற்கென சில நிபந்தனைகள் உண்டு.
இதுதான் ஒரு கிதாபை ஆய்வு செய்து அச்சிடுவதற்கான அடிப்படை உசூல்.
- துர்ருஸ் ஸமீன் கிதாபுடைய அசல் கையெழுத்துப் பிரதி:
அந்த அடிப்படையில் 1837 ஆம் ஆண்டு எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதியே காலத்தால் முந்தியது. அந்த பிரதியை முஹக்கிக் அசலானதாக கருதி அச்சிடுவதற்காக எடுத்துக் கொண்டுள்ளார்கள். தஹ்கீகின் உசூல்களை பேணி அதில் இடம்பெற்றுள்ள வார்த்தையை அப்படியே பதிவு செய்துள்ளார்கள்.
அவர்கள் தேர்வு செய்த கையெழுத்துப் பிரதியில் ايام المولد என்ற கூடுதல் வாசகம் இடம்பெறவில்லை.மாறாக كنت أصنع طعاماً صلة بالنبي صلى الله عليه وسلم என்ற வாசகம் மட்டுமே இடம்பெற்றுள்ளது.
மேற்கூறிய ஆய்வு இப்படியிருக்க மௌலானா சுல்தான் பாகவி அவர்கள் இந்நூலை பின்னால் அச்சிட்டவர்கள் இருட்டடிப்பு செய்துவிட்டார்கள் என்று சொல்வது தவறான கருத்தாகும். அப்படி சொல்வது கிதாபை ஆய்வு செய்து வெளியிட்ட முஹக்கிக் மீது இட்டுக்கட்டடுவதாக அமைந்துவிடும்.
மேலும் அஹ்மதி பதிப்பகத்தில் அச்சிடப்பட்ட கிதாபில் ايام المولد என்ற கூடுதல் வாசகம் இடம் பெற்றுள்ளது. இந்த வாசகம் எந்த கையெழுத்துப் பிரதியை முன்வைத்து பதியப்பட்டது என்ற விவரங்கள் எதுவும் என்னுடைய ஆய்வில் கிடைக்கவில்லை. அதை ஆய்வு செய்து கண்டறிபவர்கள் தெளிவுபடுத்தவும். நிச்சயமாக நான் அதிலிருந்தும் பயன்பெறுவேன்.
அல்லாஹ் நம் அனைவருக்கும் பயனுள்ள கல்வியை வழங்குவானாக! நம்முடைய முன்னோர்களின் வழியில் பயணிக்கும் நஸீபை நம் அனைவருக்கும் வழங்குவானாக! ஆமீன் !
தொகுப்பு: ரியாஸ்தீன் மதராஸி
மேட்டுப்பாளையம்